சென்னை பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு! – அம்மா உணவகம் மூலம் ஏற்பாடு!
சென்னையில் தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலை பள்ளி வரை 281 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தற்போது பள்ளிகள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. அன்று முதல் இந்த வகுப்புகளுக்கு அட்மிசன் தொடங்கப்பட உள்ளது என்றாலும், முன்னதாகவே அட்மிசன் படிவங்கள், அட்மிசன் உறுதி செய்ததற்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் பள்ளிகள் தொடங்கியதும் முதல்வர் அறிவித்துள்ளபடி 1 முதல் 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்கள் மூலம் பள்ளிகளுக்கு உணவுகளை தயாரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.