வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (12:38 IST)

பாஜகவுடன் கூட்டணி முறிவா? அதிமுக மா.செ., கூட்டத்தில் ஆலோசனை

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வது பற்றி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அண்ணாமலை கூறியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  நேற்று கண்டனம் தெரிவித்து, எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோல்  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுகவினர் கடுமையான கண்டனம் தெரிவித்து வரும்  நிலையில், நேற்று பாஜக நிர்வாகி நடிகை குஷ்புவிடம் இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''அண்ணாமலை சிங்கம், அவருக்கு யாரும் பேச சொல்லித் தர தேவையில்லை. அவர் உண்மையைத்தான் பேசுவார்'' என்று கூறினார்.

இந்த நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், பங்கேற்றுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.