1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (15:17 IST)

அதிமுகவின் எந்த அணிக்கும் சப்போர்ட் இல்லை! – பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்!

Nayinar
அதிமுகவில் உள்கட்சி மோதல் தீவிரமாக உள்ள நிலையில் அதிமுகவின் எந்த அணிக்கும் பாஜக ஆதரவளிக்கவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த பொதுக்குழுவே செல்லாது என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தன்று ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பாஜக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இதனிடையே ஓபிஎஸ் பாஜகவில் இணைய உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. அதிமுக பிரச்சினை குறித்து பேசியுள்ள பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் “அதிமுகவில் பதவிக்காக சண்டை நடப்பதால்தான், நான் வெளியே வந்தேன். அக்கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. அதிமுகவில் உள்ள இரு தரப்பில் யாருக்கும் பாஜக சாதகமாக செயல்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.