வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:47 IST)

அடுத்த குறி தம்பிதுரை? ; பாஜக பக்கா பிளான் : அதிர்ச்சியில் எடப்பாடி

குட்கா விவகாரத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் அடிமட்டத்தை அசைத்து பார்க்கும் நடவடிக்கைகளில் பாஜக அரசு ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

 
சிபிஐ அதிரடி சோதனைகள் மூலம் அதிமுக தலைமைக்கு பாஜக தலைமை அவ்வப்போது அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் ஏற்கனவே சிக்கியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியது.  
 
இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.   
 
இந்த விவகாரம் தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டிஜிபி ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போர்க்கொடி தூக்கினர். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 
இந்நிலையில், அடுத்த அதிரடிகளுக்கான திட்டங்களை பாஜக வகுத்து வருவதாக தெரிகிறது. இன்னும் ஏழெட்டு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசு வேகம் காட்ட தொடங்கியுள்ளது. எடப்பாடி, ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர்  ஆகியோருக்கு அடுத்த படியாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீது பாஜக தன் பார்வையை திருப்பியுள்ளது. ஏனெனில், அவர் தொடர்ந்து பாஜகவிற்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் தாமரை மலராது என வெளிப்படையாக அவர் கொடுக்கும் பேட்டிகளை டெல்லி தரப்பு ரசிக்கவில்லையாம்.
 
குறிப்பாக, குட்கா தொடர்பான சிபிஐ ரெய்டு நடந்த போது, திமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதனால், திமுகவின் தூண்டுதல் பேரிலேயே பாஜக அரசு செயல்பட்டுள்ளது என்ற அவரின் புகார் பாஜக தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
 
எனவே, அவரையும் கட்டம் கட்ட வேலைகள் நடந்து வருகிறதாம். தம்பிதுரை தற்போது நாடாளுமன்றம் சார்ந்த ஐந்து கமிட்டிகளில் தலைவர், உறுப்பினர், சிறப்பு அழைப்பாளர் ஆகிய பதவிகளில் இருக்கிறார். எனவே, அந்த கமிட்டிகளுக்கான பணப்பரிவர்த்தனைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறதாம். 
 
அதேபோல், அவர் புதிதாக கட்டி வரும் மருத்துவக் கல்லூரியில், ஏகப்பட்ட விதிமீறல்கள் நடந்திருப்பதாக மத்திய அரசுக்கு தகவல் போயிருக்கிறது. எனவே, அந்த தகவல்களையும் மத்திய அரசு திரட்டி வருவதாக தெரிகிறது. மேலும், தம்பிதுரைக்கு நெருக்கமான சிலர் கரூரில் பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். 
 
இவை அனைத்தையும் கண்காணித்து வரும் மத்திய அரசு, விரைவில் சிபிஐ அம்பை அனைவரின் மீதும் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனால், எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்திருப்பதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.