ரூல்ஸாவது.. கோர்ட்டாவது..! – தடையை மீறும் இந்து முன்னணி, பாஜக!
தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தமிழக அரசும், நீதிமன்றமும் தடை விதித்துள்ள நிலையில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் தடையை மீறி செயல்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபட்டு அன்றே கரைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் பல இடங்களில் தடையை மீறி சிலைகள் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கலில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை எடுத்துக் கொண்டு அதை கோவிலில் வைப்பதற்காக 50க்கும் அதிகமானவர்கள் ஊர்வலமாக சென்ற நிலையில் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
திருச்சியின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்ததால் இந்து முன்னணியினர் தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் தமிழக அரசின் தடையை எதிர்த்து சிறுவனுக்கு விநாயகர் போல வேடமணிந்து கூட்டமாக ஊர்வலம் கொண்டு சென்ற பாஜகவினர் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.