செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (11:29 IST)

இது இந்தி நாடு இல்ல; இந்திய நாடு! – குரல் கொடுத்த மய்யம்!

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் காணொளியில் இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் காணொளி வகுப்பில் பல்வேறு இந்திய மாநிலங்களை சேர்ந்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் பேசியவர்கள் இந்தியில் பேசியதால், இந்தி தங்களுக்கு தெரியாது என்றும் எல்லாருக்கும் புரியும்படி ஆங்கிலத்தில் பேசுமாறும் சிலர் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு இந்தி தெரியாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என அவர்கள் பதிலளித்ததாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயல்பாட்டிற்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரதமணித்திருநாடு” என்று தெரிவித்துள்ளார்.