வேல் யாத்திரை முடிவை அரசிடம் ஒப்படைத்த நீதிமன்றம்! –பிடிவாதம் பிடிக்கும் பாஜக!
தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசிடமே நீதிமன்றம் ஒப்படைத்துள்ள நிலையில், அனுமதி அளிக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் 6 வரை முருகனின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக அரசு அனுமதி அளிக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அதேசமயம் வேல் யாத்திரை நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என விசிக சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இன்று நடைபெற்ற இந்த விசாரணையில் கொரோனா காரணமாக யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதை தொடர்ந்து அனுமதி வழங்கும் முடிவை தமிழக அரசிடமே அளித்த நீதிமன்றம் இதுதொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் “பாஜகவின் வேல் யாத்திரை என்பது மக்களை கூட்டம் கூட செய்து நடத்தக்கூடிய யாத்திரை அல்ல. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய யாத்திரை. எனவே இதற்கு அனுமதி அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.