1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (08:07 IST)

பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை தேவையா? ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மற்றும் இளநிலை பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் பாடத்திட்டம் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் அறிவுறுத்தலின்படி நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
 
இந்த தத்துவவியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை தொடர்பான பாடங்களும் இடம்பெற்று இருந்ததாகவும், அதை மாணவ-மாணவிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக திமுக இதனை கடுமையாக எதிர்த்தது
 
இந்த நிலையில் பாஜக ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதையை சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை என்றும் பகவத்கீதையை படிக்க விரும்புபவர்கள் அவரவர் வீட்டிலேயே படித்துக் கொள்ளட்டும் என்றும் தெரிவித்துள்ளார். பாஜக கொண்டு வந்த ஒரு திட்டத்தை பாஜக ஆதரவாளரே எதிர்த்து இருப்பதால் இந்த திட்டம் கைவிடப்படும் என தெரிகிறது
 
ஏற்கனவே இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா  'கட்டாயப் பாடமாக இருக்கும் பகவத் கீதை உள்ளிட்ட தத்துவவியல் பாடம் விருப்ப பாடமாக மாற்றப்படும் என்றும் விருப்பம் உள்ள மாணவர்கள் அந்த பாடத்தைத் தேர்வு செய்து படிக்கலாம் என்றும் விருப்பம் இல்லாதவர்கள் பட்டியலில் உள்ள மொத்த 12 பாடங்களில் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது