வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (11:30 IST)

தமிழகத்தை அச்சுறுத்திய பவாரியா கொள்ளையன் கைது! – 15 வருட தேடல் முடிவு!

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பவாரிய கொள்ளை கும்பலின் ஜெயில்தார் சிங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2002 முதலாக பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை கும்பல் பவாரியா. கடந்த 2002ல் காங்கிரஸ் கட்சி சேலம் மாநகர் மாவட்ட தலைவர் தாளமுத்து நடராஜன் மற்றும் குடும்பத்தினர் கொலை, 2005ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தின் கொலை உள்பட தமிழகம் முழுவதும் 24 கொலை, கொள்ளை சம்பவங்களில் இந்த பவாரியா கும்பல் ஈடுபட்டது.

இந்த கும்பலை பிடிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்ட நிலையில் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீஸார் ராஜஸ்தான், குஜராத் என பல மாநிலங்களும் சுற்றி பவாரியா கும்பல் தலைவன் ஓமா பவாரியா மற்றும் அந்த கும்பலின் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஓமா பவாரியா, அசோக் பவாரியாவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் இருவர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜெயில்தார் சிங், அவரது மனைவி பீனாதேவி மற்றும் இருவர் தலைமறைவான நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக போலீஸார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது ஜெயில்தார் சிங் சென்னையில் பிடிப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த பவாரியா கொள்ளை கும்பல் சம்பவத்தை மையப்படுத்தி தமிழில் கார்த்தி நடிப்பில் தீரன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.