திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2024 (10:22 IST)

அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடக்கம்..! காணொலி வாயிலாக துவக்கி வைத்த ஸ்டாலின்.!!

Athikadavu
65 ஆண்டு கால கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவிநாசி பாசனத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
 
அத்திக்கடவு - அவிநாசி திட்டம், 65 ஆண்டுகளுக்கும் மேலாக கனவாக இருந்து வந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் ஆயிரத்து 916 கோடி செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காலை 10 மணியளவில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
 
அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது, பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் 2 ஆயிரம் கனஅடி வெள்ள உபரி நீரை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சியான பகுதிகளின் நீர்நிலைகளில் நிரப்பி பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது.
 
இத்திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 31 ஏரிகளும், 1,045 குளம், குட்டைகளும் நீராதாரத்தை பெறும். இத்திட்டத்தின் மூலம் 3 மாவட்டங்களை சேர்ந்த 50 லட்சம் மக்கள் பயனடைவர்.


விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.