நாளைக்கு 5 மணிக்கு மேல் அத்திவரதர் தரிசனம் கிடையாது – ஏன் தெரியுமா?
அத்திவரதர் தரிசனம் தொடங்கி இதுநாள்வரை 10 லட்சம் பேர் தரிசித்திருக்கும் நிலையில் நாளை அத்திவரதர் தரிசனத்தை 5 மணியோடு நிறுத்தியிருப்பது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத நிகழ்வான அத்திவரதர் தரிசனம் ஜூலை 1ம் தேதி தொடங்கி இன்று வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலுருந்தும் பக்தர்கள் வந்தபடி உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் ஹோட்டல்கள், லாட்ஜ்கள் அனைத்து பக்தர்கள் கூட்டமாய் நிரம்பி வழிகிறது.
இதுவரைக்கும் 10 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மேலும் அத்திவரதரை தரிசிக்க காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் முதலில் கால அவகாசம் இருந்தது. அது மூன்றாவது நாளே காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு பக்தர்கள் அத்திவரதரை காண வரிசையில் நிற்கின்றனர்.
இந்நிலையில் நாளை மட்டும் அத்திவரதர் தரிசனம் மாலை 5 மணியோடு நிறைவடையும் என கோயில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். நாளை ஆனி 26 என்பதால் வரதராஜ பெருமாள் கருட சேவை நடைபெறும் என்பதால் அத்திவரதர் தரிசனத்தையும், வரதராஜ பெருமாள் தரிசனத்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.