1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (17:43 IST)

மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை.- உதயநிதி!

udhayanithi stalin
மதுரையை சேர்ந்த சமூக சேவகர்  சின்னப்பிள்ளை. சிறந்த சமூக சேவைக்காக முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் கரங்களால் விருது பெற்றவர் ஆவார். 
 
பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு தருவதாக சொன்னதாகவும், ஆனால் தரப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று மதுரை சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் மூலம் வீடு கட்டித்தருவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான ஆவணங்கள் மதுரை சின்னப்பிள்ளையிடம் நேரில் அளிக்கப்பட்டன.

 
இந்த நிலையில், பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு வீடு கிடைக்காமல் போனதே திமுகவால்தான் என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
 
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
 
''இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.
 
மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை  சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார்.
 
இதையறிந்த நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  அவர்கள், சின்னப்பிள்ளை அவர்களுக்கு  தமிழ் நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
 
'மகளிர் மேம்பாடு' எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு,  'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்'' என்று தெரிவித்துள்ளார்.