புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (15:55 IST)

கமல்ஹாசனுடன் கெஜ்ரிவால் சந்திப்பு - நடந்தது என்ன?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமல்ஹாசனை  சந்தித்து உரையாடினார். இதன் மூலம், கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
சமீபகாலமாகவே தமிழக அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும், இளைஞர்களுகு மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது. 
 
அதோடு, ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழக  அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை கமல்ஹாசன் நிரப்புவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், நான் விரைவில் அரசியலுக்கு வருவேன் கமல்ஹாசன் தற்போது வெளிப்படையாகவே பேசி வருகிறார்.
 
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டில் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடினார். 
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “அரவிந்த் கெஜ்ரிவால் என்னை சந்திக்க வந்ததை நான் பெருமையாக கருதுகிறேன். ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் என் உறவினர்களே. நாங்கள் ஏன் சந்தித்துக்கொண்டோம் என்பதை உங்களால் ஊகிக்க முடியும். அவருடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என கமல்ஹாசன் கூறினார்.
 
அதன் பின் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “தனிப்பட்ட முறையிலும், ஒரு நடிகர் என்ற முறையிலும் கமல்ஹாசனின் ரசிகனாகவே இருக்கிறேன். அவர் ஊழலுக்கு எதிராகவும், மதவாதத்திற்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஊழலுக்கு எதிரானவர்கள் ஒன்று சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது.  தமிழ் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தேசிய அரசியல் பற்றி இருவரும் பேசினோம். மீண்டும் நாங்கள் தொடர்ந்து பேசுவோம். நாடு தற்போதுள்ள சூழலில் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும்” என அவர் பேசினார்.
 
ஆம் ஆத்மியில் தான் இணைய இருப்பதாக கமல் எதுவும் கூறவில்லை. ஆனால், மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிரானவர்கள் ஒருங்கிணைய வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதை பார்க்கும் போது, கமல்ஹாசனை ஆம் ஆத்மியில் இணையுமாறு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருப்பார் எனக் கருதப்படுகிறது.