இந்த நிலையில்தான் ஜெ. அனுமதிக்கப்பட்டார் - அப்போலோ துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படுக்கை நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என அப்போலோ துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேட்டியளித்துள்ளார்.
மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணமடைந்தது வரை அனைத்திலுமே மர்மமே நீடிக்கிறது. மருத்துவமனையில் அவரை யாருமே சந்திக்கவில்லை என்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியது. எனவே, இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. எனவே, ஜெ.வின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைத்துள்ளது.
இந்நிலையில், ஜெ.வின் மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட சில கேள்விக்களுக்கு அப்போலோ குழுமத்தின் துணைத்தலைவர் ப்ரித்தா ரெட்டி டெல்லியில் பதிலளித்தார்.
“ஜெயலலிதா படுத்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு சிறந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு நோயளிக்கும் தன்னை யார் சந்திக்க வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை உள்ளது. ஜெயலலிதா விவகாரத்தில், அவர் விரும்பியவர்கள் மட்டுமே அவர் அருகில் இருந்தனர்.
அதிமுக அமைச்சர்கள் அவரை சந்தித்தார்களா என எனக்கு தெரியாது. சிறந்த சிகிச்சையின் மூலம் அவரின் உடல் நலம் தேறியது. எனவே, அவர் குணமடைவார் என அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
அதேபோல், ஜெ. வின் கை ரேகை அவருக்கு தெரிந்துதான் பெறப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த நேரத்தில் நான் மருத்துவமனையில் இல்லை. எனவே, அதுபற்றி எனக்குத் தெரியாது என அவர் தெரிவித்தார்.