திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (12:01 IST)

விதவிதமா கிளம்பி வராங்களே.. குரூப்புல டூப்பா? - புதிய உதயம் அபுஅதிமுக!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அபுஅதிமுக என்று புதிதாக உருவாகியுள்ள கட்சியின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய கட்சிகள் நாளுக்கு நாள் நிறைய உருவாகி வருகின்றன. சின்ன சின்ன லெட்டர்பேட் கட்சிகளும் கூட தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் சூழல் உள்ளது. அமெரிக்கா போல இரு கட்சி கொள்கை இந்தியாவில் கிடையாது என்பதால் சமூகம் ரீதியாக தொடங்கப்படும் கட்சிகள் மட்டுமல்லாது, குறிப்பிட்ட பெரிய கட்சியிலிருந்து விலகும் பிரமுகர்கள் தனிக்கட்சி தொடங்குவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் அஇஅதிமுக போலவே பெயர் கொண்ட அபுஅதிமுக (APADMK) என்னும் அண்ணா புரட்சிதலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி அதற்கு தன்னை தானே பொது செயலாளராகவும் ஆக்கி கொண்டுள்ளார் வி.செந்தில்குமார் என்பவர். இதுகுறித்து ஒட்டியுள்ள போஸ்டரில் “தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நமது கழகத்தில் தற்போது நிர்வாகிகளுக்கான நியமனம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது” என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் தீபாவளிக்கு ஆஃபர் விளம்பரம் போல் உள்ளதாக சிலர் கிண்டலாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.