ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:58 IST)

#பதில்_சொல்லுங்கள்_மோடி..''உங்கள் வாக்குறுதி எங்கே போனது?''- அமைச்சர் உதயநிதி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் திமுக இணைந்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் அக்கட்சியின் தலைமையில் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியாகி, வேட்பு மானுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், இன்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 
 
இன்று அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து கேள்வி எழுப்பி பதில் சொல்லுங்கள் மோடி என்ற ஹேஸ்டேக் பதிவிட்டுள்ளார்.
 
அதில், ''மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
 
தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்? 
 
2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?
 
இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?
 
கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?
 
ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?
 
அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?
 
அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?
 
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?
 
வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு? 
 
நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? #பதில்_சொல்லுங்கள்_மோடி என்று தெரிவித்துள்ளார்.