திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2024 (12:46 IST)

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்.! கைது செய்ய காவல்துறை முனைப்பு.!!

Maha Vishnu
மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் மகா விஷ்ணு என்பவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இப்படி மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என மாற்றுத் திறனாளி ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். அதற்கு அந்த சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு மைக்கில் பேசி அவரை அவமானப்படுத்தினார். 
 
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து  அசோக் நகர் காவல் நிலையத்தில் மகா விஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக சிபிஎம் கட்சியைச் சார்ந்த வில்சன் என்பவர் புகார் அளித்தார். அனைத்து உலக மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மகா விஷ்ணு நடத்தும் 'பரம்பொருள்' அறக்கட்டளை அமைந்துள்ள திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது மகாவிஷ்ணு அங்கு இல்லாத நிலையில் அவர் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர் ஆஸ்திரேலியா சென்றதாக கூறப்படுகிறது.

நான் எங்கும் ஓடவில்லை:
 
இதனிடையே மகாவிஷ்ணு வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் எங்கும் ஓடவில்லை, தலைமறைவாகவில்லை, ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இன்று சென்னை வருவதாகவும்,   சென்னை திரும்பியவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பேன் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், மகாவிஷ்ணு மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்படுள்ளது. மாற்றுத்திறனாளிகளை இழிவாகப் பேசியதாக  மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம் சார்பில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது. 

 
 
மகாவிஷ்ணு மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவதால், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும் போலீசார் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.