வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2024 (08:04 IST)

நான் தலைமறைவாகவில்லை… இங்குதான் இருக்கிறேன் – பரம்பொருள் மகாவிஷ்ணு பதில்!

சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூட நம்பிக்கைகள் மற்றும் முற்பிறவி பற்றியெல்லாம் மாணவர்கள் மத்தியில் பேசி சர்ச்சையில் சிக்கினார் மகாவிஷ்ணு. அப்போது அவர் மாற்றுத்திறனாளிகள் பற்றி பேசிய கருத்து அங்கிருந்த ஆசிரியர் சங்கர் என்பவரால் தட்டிக்கேட்கப்பட்ட போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மகாவிஷ்ணு.

இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆசிரியர் சங்கரைப் பாராட்டி பேசினார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள், மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் மகாவிஷ்ணு எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து பரம்பொருள் அமைப்புக்கு போலீஸார் விசாரணைக்கு சென்றபோது அங்கு மகாவிஷ்ணு இல்லையென்றும், அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து மகாவிஷ்ணு வெளியிட்டுள்ள வீடியோவில் “நான் எங்கும் ஓடவில்லை. தலைமறைவாகவில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். நாளை(இன்று) மதியம் 1 மணியளவில் சென்னை ஏர்போர்ட்டிற்கு வருவேன். இப்போதைய சூழலில் இந்தியாவில் இருப்பதையே விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். அதனால் அவர் சென்னை வரும்போது கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.