செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (07:35 IST)

ராமர் கோயில் சிறப்பு பூஜையை தடுத்தால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்: அண்ணாமலை

ராமர் கோவில் திறப்பு விழா தினத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்யக்கூடாது என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: அமைதியான முறையில் கோயிலுக்குள் நடைபெறக்கூடிய நிகழ்வுகளில் தி.மு.க கை வைப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுமதியெல்லாம் ஒன்றும் தேவையில்லை. அவர்கள் என்ன நிறுத்துகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். எல்லா கோயில்களிலும் பூஜை செய்யுங்கள் மக்களுக்குத் திருப்தியாக சாப்பாடு போடுங்கள் என்று பா.ஜ.க நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறோம்.
 
யார் தடுக்கிறார்கள் என்று நாளை பார்த்துக் கொள்ளலாம். இதைத் தடுத்தால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். உங்களுடைய (முதல்வர் ஸ்டாலின்) மகன் நடத்துகின்ற விழாவுக்குத் தமிழ்நாட்டின் பேருந்துகளை எல்லாம் திருப்புகிறீர்கள். தங்கை கொடியேற்றுகிறார், மகன் நிகழ்வு நடத்துகிறார், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு குடும்ப விழா போல தி.மு.க-வின் இளைஞரணி மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் தமிழக அரசு அனுமதி கொடுக்கும்... ஆனால், கோயிலுக்குள் நடக்கிற நிகழ்வுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என இவர்கள் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது. தீபாவளி, பொங்கலுக்கும் இந்த அரசு இதே மாதிரி அறிக்கை கொடுக்குமா...
 
எங்களின் தொண்டர்கள் அனைவரிடத்திலும் தடையை மீறி இறங்குங்கள் என்று சொல்லி இருக்கிறோம். எல்லாம் ஓரளவுக்குதான் பொறுக்க முடியும். ஒழுக்கமாக நடந்து கொண்டால் தான் அரசுக்கு மரியாதை. அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் அரசுக்கு மரியாதை கிடையாது. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்த அரசுக்கு ஆணவம் அதிகம் ஆகிவிட்டது. மக்களின் வழிபாட்டு நெறிமுறைகளில் கை வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்கள். இனி இந்த அரசு மீது மரியாதை இல்லை. பாஜகவின் இந்த தொண்டனும் நாளை அரசை மதிக்கப் போவது கிடையாது" என்று அண்ணாமலை கூறினார்.
 
Edited by Siva