வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (13:13 IST)

உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல.. நீட் தேர்வு மரணம் குறித்து அண்ணாமலை..!

உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல என நீட் தேர்வு தோல்வியால் மரணம் அடைந்த சென்னை மாணவர் மற்றும் அவரது தந்தை மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்றும், மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை திரு செல்வசேகர் அவர்களும் தற்கொலை செய்திருக்கிறார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 
 
எந்தச் சூழ்நிலையிலும், உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல, எதற்கான தீர்வுமல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ஒரு நிமிட தவறான முடிவால், உங்கள் பெற்றோர்கள் ஆயுட்காலம் முழுவதும் வேதனைப்படும்படி செய்வது தவறு. 
 
மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரித் தேர்வுகள், அரசுப் பணித் தேர்வுகள், குடிமையியல் பணித் தேர்வுகள் என தங்கள் கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையில் பரிட்சைகள் பள்ளி கல்லூரி பருவத்துடன் முடிவடைவதில்லை என்பதே எதார்த்தமான உண்மை. 
 
குழந்தைகள், சமூக அழுத்தங்களுக்குப் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்குரியது. ஒவ்வொரு குழந்தையும் தனிச் சிறப்புடனேயே பிறக்கிறது. யாருக்கான வாய்ப்பையும் யாரும் பறித்து விட முடியாது. எனவே, குழந்தைகளை, கல்வி, மதிப்பெண்கள் வைத்து ஒருவரோடு ஒருவர் ஒப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணங்களை விதைப்போம். மன உறுதியுடன் வளர்ப்போம்.
 
Edited by Mahendran