வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 செப்டம்பர் 2025 (16:15 IST)

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த அரசு பள்ளிகளுக்கு விடுமுறை.. அண்ணாமலை கண்டனம்..!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த அரசு பள்ளிகளுக்கு விடுமுறை.. அண்ணாமலை கண்டனம்..!
அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியதை முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
 
திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றைய தினம், திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 
 
பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுகவின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. 
 
நிகழ்ச்சி நடத்த, ஊரை அடித்து உலையில் போட்டிருக்கும் திமுகவினருக்குச் சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு.
 
திமுகவின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.
 
Edited by Mahendran