திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (11:28 IST)

பாஜகவினரின் மனதைரியத்தை குறைக்க முடியாது – அண்ணாமலை!

பெட்ரோல் குண்டு வீச்சால் பாஜக சகோதர, சகொதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என எண்ணாதீர்கள் அண்ணாமலை டிவிட்.

கோவையில் பாஜக அலுவலகம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சித்தாபுதூரில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அப்பகுதியில் பைக்கில் சென்ற இருவர் திடீரென கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அப்பகுதியில் பாஜகவினர் பலரும் கூடிய நிலையில் சம்பவ இடம் விரைந்த போலீஸார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம ஆசாமிகள் பீர் பாட்டிலில் பெட்ரோல் வைத்து வீசிய காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் பாட்டில் உடையாததால் தீப்பற்றவில்லை. போலீஸார் அந்த பாட்டிலையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

அதுபோல நேற்று இரவு கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் நிரம்பிய பீர் பாட்டில் வீசப்பட்டுள்ளது. ஆனால் அந்த பாட்டிலும் உடையாததால் தீப்பற்றவில்லை. இந்த இரண்டு சம்பவங்களும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது, பெட்ரோல் குண்டு வீச்சால் பாஜக சகோதர, சகொதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என யாரும் நினைத்து விட வேண்டாம். சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மேலும் வேகப்படுத்தப்படும் என கூறினார்.

மேலும் சட்டம், ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.