திமுகவை கண்டித்து பாஜக சிறை நிரப்பும் போராட்டம்! – அண்ணாமலை அறிவிப்பு!
இந்து மக்களை இழிவுபடுத்தி பேசியது உள்ளிட்டவற்றை கண்டித்து பாஜக அறவழி போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை ”தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சியில் தமிழரின் தொன்மையையும், இறை நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவை மாவட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து வரும் 26ம் தேதி அறவழியில் சிறை நிரப்பும் போராட்டத்தை பாஜக நடத்த உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.