வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (12:18 IST)

பாஜகவினரை மட்டும் கைது செய்வது ஏன்? வானதி கேள்வி!

பாஜகவினரை மட்டும் கைது செய்வது ஏன்? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி என்பவர் திமுக எம்பி ஆ ராசா குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதோடு அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவருக்கு 15 நாள் காவல் என உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இரு குழுக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பாலாஜி உத்தமராமசாமி பேசியதாக அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் திடீரென தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ: “ஆ.ராசா நாக்கை வெட்டினால் பரிசு!”; விளம்பரம் செய்த மதுரைக்காரர் கைது!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் குறித்து அவதூறாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் போஸ்டர் ஒட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடசென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் தமிழக முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததாகவும் இதில் அண்ணாமலையின் உதவியாளர் பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் குறித்து பேசும் திமுக, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், பாஜகவினரை மட்டும் கைது செய்வது ஏன்? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டங்கள் வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக அரசு கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.