இன்று ஒரே நாளில் தென்னிந்தியாவுக்கு வருகை தரும் அமித்ஷா-ராகுல்காந்தி
மேற்குவங்கம் உள்பட கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்ட பாஜக, அடுத்ததாக தென்னிந்தியாவை குறிப்பாக தமிழகத்தை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அமித்ஷா விரைவில் களமிறங்குவார் என தெரிகிறது.
இந்த நிலையில் இன்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். அவருடைய வருகையை ஒட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவை முடித்துவிட்டு அவர் தமிழக பாஜக தலைவர்களுடன், தமிழகத்தில் பாஜகவை காலூன்ற செய்வது எப்படி? என்பது குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலுக்குள் தமிழக பாஜகவில் பெரிய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் மூழ்கிக்கிடக்கும் தமது மக்களவைத் தொகுதி வயநாடு உள்ளிட்ட வெள்ளச் சேதப் பகுதிகளைப் பார்வையிட இன்று கேரளாவுக்கு வருகை தருகிறார் ராகுல்காந்தி. மீட்பு நடவடிக்கைகளை பாதிக்காத வகையில் ராகுல்காந்தியின் சுற்றுப்பயணம் அமையும் என்றும் பாதிக்கப்பட்ட ஒருசில மக்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கேரள காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் இரண்டு தேசிய கட்சிகளின் தலைவர்கள் தென்னிந்தியாவுக்கு வருகை தருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது