ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (06:38 IST)

மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் சோனியா காந்தி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஷாத் இந்த தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
 
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முயற்சித்தபோதும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார்.
 
இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் மீண்டும் ராகுல்காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் ராகுல்காந்தி மறுத்துவிட்டதை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பரிசீலனை நடந்தது. பின்னர் நீண்ட ஆலோசனைக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டார்.


சோனியா காந்தி ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக இருந்தவர் என்பதும் ஐந்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் 1998ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை சோனியா, ராகுல் ஆகிய இருவர் மட்டுமே மாறி மாறி காங்கிரஸ் கட்சியின் தலைவராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.