இனி அனைத்து மாநில அலங்கார ஊர்திகளுக்கும் அனுமதி! – குடியரசு தின விழா அணிவகுப்பில் சில மாற்றங்கள்!
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநில அரசுகளின் ஊர்திகள் காட்சிப்படுத்துவதற்கான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ராணுவ அணிவகுப்பு உள்ளிட்டவற்றோடு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பிற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற போகும் அலங்கார ஊர்திகளை, அதன் நோக்கங்களை ஆய்வு செய்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அதற்கு அனுமதியை வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகள் முன்னதாக அவ்வாறு தமிழகத்திலிருந்து அணிவகுப்பிற்கு அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற அனுமதி அளிக்கப்படாதது சர்ச்சைக்கு உள்ளானது. அதுபோல தொடர்ந்து சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்தின் அலங்கார ஊர்திகளும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அணிவகுப்பில் பங்கேற்கும் வகையில் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு மாநிலத்தின் அலங்கார ஊர்தி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக அணிவகுப்பில் இடம்பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
Edit by Prasanth.K