அமைதிப்பேரணி தொடங்கியது : கருப்பு சட்டையில் பங்கேற்ற அழகிரி
மு.க.அழகிரி தலைமையில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதிக்கு அமைதிப்பேரணி நடைபெற்று வருகிறது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தனது தலைமையில் செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தப்படும் என அவரது மகனான அழகிரி தெரிவித்திருந்தார். திமுகவின் உண்மையான விசுவாசிகள் சுமார் 1 லட்சம் பேர் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று அழகிரி அறிவித்ததால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அமைதிப்பேரணி நடைபெற நேற்றே ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சென்னையில் பல இடங்களில் அமைப்பேரணிக்கான போஸ்டரும் ஒட்டப்பட்டது. கருணாநிதியின் நினைவிடமும் மலர்களால் ஜகஜோதியாக அலங்கரிக்கப்பட்டது.
அதன்படி அழகிரி தலைமையில் தற்பொழுது அமைதிப் பேரணி தொடங்கியுள்ளது. அழகிரி கருப்புச் சட்டை அணிந்தவாறு பேரணியில் கலந்து கொண்டுள்ளார். அவரோடு அவரது மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்தவாரும், பெரிய பெரிய பிளக்சுகளை கையில் ஏந்தியும், அழகிரியின் மாஸ்கை அணிந்தபடியிம் அழகிரியை புகழ்ந்து முழக்கமிட்டபடியும் அமைதிப்பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி சற்று நேரத்தில் மெரினாவை அடைய உள்ளது.