அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்த தம்பிதுரை, சிவி சண்முகம்.. என்ன நடக்கிறது அதிமுகவில்?
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உள்ள தலைவர்கள் டெல்லி சென்று பாஜக பிரமுகர்களை சந்தித்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக தம்பிதுரை மற்றும் சி.வி. சண்முகம் இருவரும் டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜகவை இணைப்பது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையில் தற்போது பாஜக இருப்பதாகவும், அதனால்தான் அதிமுக பிரமுகர்களை டெல்லிக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமித்ஷா, அதன் பிறகு செங்கோட்டையனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அதிமுகவின் மூத்த தலைவர்கள் தம்பிதுரை மற்றும் சி.வி. சண்முகம் இருவரையும் தனித்தனியாக அழைத்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனை அடுத்து, இருவரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர்.
மொத்தத்தில், அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்யவும், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
Edited by Siva