புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (17:59 IST)

22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்! திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதா?

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மே 19ஆம் தேதி 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று அறிவிக்கப்பட்டது. எனவே இதன் முடிவுகள் வெளிவந்த பின்னர் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக அரசு நீடிக்குமா? இல்லை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோன்றுமா? அல்லது அமமுக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று தொங்கு சட்டமன்றம் அமையுமா? என்பது தெரிய வரும்
 
தற்போதைய நிலவரப்படி அதிமுகவுக்கு 113 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் அவர்களில் தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் தனி அணியாகவும்,  பிரபு, கலைச்செல்வன் , ரத்தினசபாபதி ஆகியோர் அமமுக ஆதரவாளர்களாகவும் உள்ளனர்,. எனவே இந்த 6 பேர்களை கழித்துவிட்டால் அதிமுகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர்.
 
மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அதிமுக அரசுக்கு தேவை. எனவே நடைபெறவிருக்கும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் அதாவது பாதியில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக அரசு நீடிக்கும். அல்லது ஐந்தில் வெற்றி பெற்று மேற்கண்ட ஆறு எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றாலும் போதுமானது 
 
மேலும் திமுக கூட்டணிக்கு 97 எம்.எல்.ஏக்கள் தற்போது உள்ளனர். எனவே திமுக ஆட்சி அமைக்க 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.