எழுந்து கும்புடு போடுய்யா.. சும்மா உட்காந்துட்டு இருக்க.. அதிமுக வேட்பாளரை லெஃப்ட் ரைட் வாங்கிய அன்புமணி!
பிரச்சாரத்தின் போது அன்புமணி அதிமுக வேட்பாளரை திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
101 சதவீதம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று கூறிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி மக்களவைத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்துள்ளது.
தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் ஆரணியில் அதிமுக வேட்பாளார் ஏழுமலையை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்குபெற்றனர்.
அப்போது மக்களிடையே அன்புமணி அனல்பறக்க பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதிமுக வேட்பாளார் ஏழுமலை சேரில் அமர்ந்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்து கடுப்பான அன்புமணி, நாங்க இங்க கஷ்டப்பட்டு பேசிட்டு இருக்கேன், மக்கள் வெயில்ல நின்னுட்டு இருக்காங்க ஆனால் வேட்பாளர் ஹாயா உக்காந்துட்டு இருக்காரு, எழுந்து மக்களுக்கு வணக்கம் சொல்லுங்க.. இன்னும் பத்து நாளைக்கு உக்காரவே கூடாது என கோபமாக பேசினார்.
பயந்துபோன வேட்பாளர் எழுந்து நின்று மக்களிடையே வணக்கம் போட்டார். அன்புமணி இப்படி பேசியது அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்தது. அதுபோக கூட்டத்தில் இதனால் சற்று நேரம் சலசலப்பும் ஏற்பட்டது.