மரியாதை தெரியாத இளங்கோவன் வெளியில் வர முடியாது: மிரட்டும் அதிமுக!
மரியாதை தெரியாத இளங்கோவன் வெளியில் வர முடியாது: மிரட்டும் அதிமுக!
ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நாவடக்கத்துடன் பேச வேண்டும் இல்லை என்றால் அவர் வெளியில் வர முடியாது என அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டசபையில் வைக்க இருப்பதாகவும், அதனை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுடன் வைப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
மேலும் ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைத்தால் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் படத்தை ஐஜி அலுவலகத்தில் வைப்போம் என்றார். ஜெயலலிதாவுடன் சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோரை இளங்கோவன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினரை கோபத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் இளங்கோவனுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதாவை கடுமையாக தரக்குறைவாக விமர்சிப்பதை இளங்கோவன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய புகழேந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா, ராகுலை பற்றி ஜெயலலிதா எந்த இடத்திலும் அநாகரீகமாக விமர்சித்தது இல்லை. இளங்கோவனின் தாயார் சுலோசனா சம்பத் மறைந்த போது அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா இளங்கோவனிடம் மனமாச்சரியங்களை மறந்து துக்கம் விசாரித்து விட்டு வந்தார். அந்த நாகரீகம், பண்பாடு மரியாதை எதுவுமே இளங்கோவனிடம் இல்லை. எனவே இளங்கோவனுக்கு நாவடக்கம் தேவை என்றார்.
