1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (10:08 IST)

சிவில் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது! மீறினால் நடவடிக்கை பாயும்.!! போலீஸாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவு..!!!

adgb arun
சிவில் பிரச்சனைகளில் போலீசார் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்று ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.
 
நிலம் வீடு மற்றும் பண பிரச்சினைகளில் போலீசார் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்று நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் மேற்கண்ட பிரச்சினைகளில் போலீசாரின் தலையீடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை போலீசார் மீறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், எஃப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்தவொரு மனுக்கள் மீதும் காவல்துறை எந்த விசாரணையும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பணத்தகராறு, சொத்துத்தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
தலையிட வேண்டிய சூழல் வந்தால் மாவட்ட எஸ்பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் மீறினால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் ஏடிஜிபி அருண் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.