1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (23:24 IST)

சொந்த மண்ணில் தொடர் தோல்வி.! டி20 தொடரையும் இழந்தது இந்தியா..!! ஆஸ்திரேலியா அபார வெற்றி.!!!

australia
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி,  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 
 
இதை அடுத்து இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று தொடரில் சம நிலையில் இருந்தன.
 
இந்நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நவி மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 34 ரன்கள் எடுத்தார். 
 
aus women
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகள், அலிசா ஹீலி, பெத் மூனி ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரை சதம் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். அலிசா ஹீலி 55 ரன்களுக்கும், பெத் மூனி 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதை அடுத்து வந்த வீராங்கனைகள் சிறப்பாக விளையாட, ஆஸ்திரேலியா மகளிர் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 
 
aus
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா மகளிர் அணி டி20 கிரிக்கெட் தொடரையும் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் ஒரு நாள் மற்றும் டி20 தொடரை இந்திய மகளிர் அணி இழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.