காட்டு பரமக்குடியில் உள்ள திருவேட்டை உடைய அய்யனார் கோவிலை அபகரிக்க நடிகர் வடிவேலுவும், அவரது ஆதரவாளரும் முயற்சிப்பதாக கூறி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டு பரமக்குடியில் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் உள்ளது. நடிகர் வடிவேலு உள்ளிட்ட அப்பகுதி மக்கள் பலருக்கு குலதெய்வமாக இருந்து வரும் அந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அதன் அறங்காவலராக பாக்யராஜ் என்பவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபமாக நடிகர் வடிவேலுவின் தூண்டிதலின் பேரில் பாக்யராஜ் அந்த கோவிலை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருவதாக சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் திடீரென நேற்று கோவிலின் முன்பு கூடிய காட்டுபரமக்குடி மக்கள் நடிகர் வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவிலுக்கு புதிய தலைவர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த கோவிலின் பரம்பரை நிர்வாகியும், தற்போது அறங்காவலராக இருந்து வரும் பாக்கியராஜ், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கோவில் பிரச்சினை தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், 11ம் தேதி பரமக்குடி போலீஸ் நிலையத்தில் கூட்டம் நடக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அப்படி இருக்கும்போது திடீரென தேவையின்றி கோவிலை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி தேவையின்றி சிலர் பிரச்சினை செய்து வருவதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Edit by Prasanth.K