வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (15:05 IST)

அரசியல் ஆபத்தான விளையாட்டு, கவனமாக விளையாடனும்: ரஜினி பரபரப்பு பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டி அளித்தார்.

அதில் தனது சினிமா பயணங்கள்,  அரசியல் நகர்வுகள் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது நண்பரான நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை பற்றி குறிப்பிட்டுள்ளார். 
 
தனக்கு நகைச்சுவை நிறைந்த காட்சிகளை படமாக்குவது மிகவும் பிடிக்கும் என்று கூறிய ரஜினி, அத்தகைய காமெடி காட்சிகளை படமாக்க போகிறார்கள் என்றால், செட்டிங் மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்று  தெரிவித்தார்.
 
 தனது நெருங்கிய நண்பரான கமல் தனக்கு அரசியல் போட்டியாளர் இல்லை என்று பேட்டியில் குறிப்பிட்டார். ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையை வெகுவாக பாராட்டிய ரஜினி அரசியலில் வருவோருக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் ரோல் மாடல் என்றார். 
 
பிரதமர் மோடியை பற்றி ரஜினி குறிப்பிடுகையில் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய விரும்புவதாகவும், அதற்காக அவர் கடினமான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், தற்போது சிறப்பானவற்றை செய்து வருவதாகவும் ரஜினி பாராட்டினார்.

அரசியல் களம் குறித்து ரஜினி பதிலளிக்கையில் அரசியல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலான ஒன்று. அரசியல் மலர்கள் நிறைந்த பாதை இல்லை. இது ஆபத்தான விளையாட்டு மற்றும் நாடகம் நிறைந்தது. கவனமுடன் விளையாட வேண்டும் நேரம் மிக முக்கியமானது என்றார்.

இயக்குனர் பாலச்சந்தர் குறித்து குறிப்பிடுகையில் , தன்னிடம் இருக்கும்  எதையும் வேகமாக செய்யும் தன்னுடைய திறமையை அவர் கண்டறிந்ததாகவும் அதன்படியே செயல்படு என்று தன்னை அறிவுறுத்தியதாகவும் அதுவே தன்னுடைய ஸ்டைலாக இன்றுவரை தொடர்வதாகவும் ரஜினி கூறினார்.