வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (14:14 IST)

70 வயதில் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

கரூர் அருகே ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மரக்கன்றுகளையும், முருங்கை விதைகளையும் மக்களுக்கு கொடுத்து பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்வு மிகவும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழக அளவில் அந்த கிராமத்தினை முன்மாதிரியான கிராமமாக மாற்ற முன்வருவேன் என்றும் பேட்டி அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரவனை பஞ்சாயத்து தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ளவர் எம்.கந்தசாமி, ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் 70 வயதிலும் ஏழை மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு மக்களே அழைப்பு விட்ட நிலையில், திடீரென்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இருப்பினும் இவருடன் சேர்த்து 6 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், இவரிடம் அப்பகுதியில் படித்த மாணவர்கள் இவருக்காக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இவரை 206 வாக்குகள் வித்யாசத்தில் 1174 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
 
இந்நிலையில், இவரது பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியானது, சுண்டுகுளிப்பட்டி பகுதியில் உள்ள வரவனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எல்லோரை விடவும், முருங்கை கன்றுகளையும் மரக்கன்றுகளையும் அனைவருக்கும் கொடுத்து வித்யாசமுறையில் பதவியினை ஏற்றுக் கொண்டார். 
 
இந்நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரியும், வேளாண் துறை அதிகாரியுமான ராஜேஸ்குமார் இவருக்கு பதவி ஏற்பினை நிகழ்த்தி வைத்தார். ஊராட்சி மன்ற செயலாளர் ஆர்.வீராசாமி, அப்பகுதி பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், பஞ்சாயத்து தலைவருமான எம்.கந்தசாமிக்கு உறுதுணையாக இருந்தனர்.
 
இந்நிலையில் வரும் காலத்தில் தமிழக அளவில் இந்த வரவனை கிராமத்தினை முன்மாதிரி கிராமமாக்குவது தான் தனது லட்சியம் என்றதோடு, மேலும், ஆங்காங்கே வசிக்கும் எனது கிராம மக்கள் வீடுகள் தோறும், முருங்கை மரங்களும், பழ மரங்களும் நட்டு அவர்களை ஒவ்வொரு விவசாயியாக மாற்றுவது தான் அவரது லட்சியம் என்றதோடு, அதில் இருந்து ஒரு காசு கூட பஞ்சாயத்திற்கு வேண்டாம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 
 
ஆங்காங்கே வெடி வைத்தும், பிளக்ஸ் பேனர்கள் வைத்தும், கிடா விருந்து வைத்தும் பதவி ஏற்கும் பஞ்சாயத்து தலைவர் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் இந்த நூதனமான முறையில் மரக்கன்றுகளையும், முருங்கை விதைகளையும் கொடுத்து ஒவ்வொரு வீட்டிலும் விவசாய புரட்சியை வித்திக்க வேண்டுமென்ற கொள்கையில் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வித்யாச பஞ்சாயத்து தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சியானது அனைவரையும் கவர்ந்தது.
 
இந்நிகழ்ச்சி கரூர் மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், தென் தமிழக அளவில் மிகுந்த சுவாரஸ்யத்தினையும் ஏற்படுத்தியது.