1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (09:54 IST)

எ.வ.வேலு vs டிஆர் பாலு: ஒதுங்கி போகும் ஆ.ராசா... திமுக பொருளாளர் யார்?

திமுகவின் பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடபோவதில்லை என திமுகவை சேர்ந்த ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

 
திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் கடந்த பிப்ரவரி மாதம் காலமானார். இதனையடுத்து அவர் வகித்து வந்த பதவி காலியானால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக துரைமுருகன் தாம் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். 
 
ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொதுச் செயலாளர் தேர்வு தடைபட்டது. இந்நிலையில் வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடுவதாகவும் அதில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, திமுகவில் புதிய பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் 4 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
அதேபோல தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெற ஐந்தாம் தேதி கடைசி நாள் என்றும் அறிவித்துள்ளது. 
இதனிடையே பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதே சமயம் பொருளாளர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆம், ஆ.ராசா, எ.வ.வேலு மற்றும் டிஆர் பாலு ஆகியோர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், இதில் ஆ.ராசா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், திமுகவின் பொருளாளர் பொறுப்புக்கு நான் விண்ணப்பம் வாங்கப் போவதுமில்லை, போட்டியிடப் போவதுமில்லை என ஆ.ராசா சற்றுமுன் தெரிவித்துள்ளார். 
 
எனவே, எ.வ.வேலு அல்லது டிஆர் பாலு ஆகியோர் போட்டியிட இதில் எவரேனும் ஒருவர் பொருளாளர் ஆக வாய்ப்பு உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிலும் டிஆர் பாலு பொருளாளர் ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.