கார்த்திக் சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க மறுத்தேன் – கே எஸ் அழகிரி பேச்சால் காங்கிரஸில் விரிசல் !
தமிழக காங்கிரஸில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் குழப்பங்களால் கட்சி முன்னணித் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பது உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் கராத்தே தியாகராஜன், ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்’ என்று பேசி திமுக – காங்கிரஸ் இடையே விரிசலை உண்டாக்கினார். இதற்காக அவர் விளக்கம் அளித்த போதும் அவரைக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது காங்கிரஸ் தலைமை.
இதையடுத்து சென்னையில் ப சிதம்பரத்தை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் கே எஸ் அழகிரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாற்றுகளை வைத்தார். கார்த்தி சிதம்பரத்துக்கு சிவகங்கை தொகுதியில் சீட் தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவருக்குப் பதில் நாசே ராமச்சந்திரனை நிறுத்த கூறியவர் கே எஸ் அழகிரி எனக் கூறி, ப சிதம்பரம் மற்றும் கே எஸ் அழகிரிக்கு இடையில் நடக்கும் பணிப்போர் பற்றிக் கொளுத்திப் போட்டார்.
இதற்குப் பதிலளித்துள்ள கே எஸ் அழகிரி ‘ கட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் கேட்கப்படும் ஆலோசனைகளுக்கு நான் பதில் அளிப்பேன். நான் பரிந்துரைத்த சிலருக்கு சீட் கிடைத்துள்ளது, ஆனால் பலருக்கு சீட் கிடைக்கவில்லை. அதில் ஒன்றும் தவறு இல்லையே. அதற்குத்தானே என்னை தலைவராக நியமித்துள்ளனர்.’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகக் காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் இருப்பது உறுதியாகியுள்ளது.