உறவினர்களை துடைப்பத்தால் அடிக்கும் விநோத விழா
தேனி அருகே கோயில் திருவிழாவில் ஒருவொருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த மறவப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல் இவ்வாண்டின் சித்திரை மாத பொங்கல் திருவிழா, நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு நடைபெற்ற ஒரு விநோத நிகழ்ச்சி வெளியூர் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
அங்கு வாழும் மாமன் - மைத்துனர்கள் ஒருவருக்கொருவரை துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்படி அடித்துக் கொள்வதால் குடும்பத்தில் நிலவும் பிரச்னைகள் நீங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இந்த நிகழ்ச்சியை வெளியூரில் இருந்து வந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும் பலர் இதனை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.