வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2023 (09:11 IST)

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா தொடக்கம்! – ரோந்து பணியில் இலங்கை கடற்படை!

Katchatheevu
இந்தியா – இலங்கை கடல் எல்லையில் உள்ள கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்கியுள்ளது.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே வங்கக்கடலின் எல்லைப்பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்குள்ள அந்தோனியார் ஆலயத்தில் தவக்காலத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் இலங்கை மக்களும் திரளாக கலந்து கொள்வர். இந்த ஆண்டிற்கான அந்தோணியார் திருவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு நெடுந்தீவு பங்குதந்தை எமிலி பால் கொடியேற்றி வைக்கிறார். அதை தொடர்ந்து ஆலயத்தை சுற்றி சிலுவை பாதை திருப்பலி நடைபெறும். இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

நாளை யாழ்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டன் பிரகாசம் தலைமையில் காலை 7 மணிக்கு திருப்பணி நடைபெற்று, இரவு 9 மணிக்கு கொடி இறக்கம் செய்யப்படும். இந்த திருவிழாவிற்காக ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கச்சத்தீவு புறப்பட்டுள்ளனர். 60 விசைப்படகுகள் மற்றும் 12 நாட்டுப்படகுகளில் 2,408 பக்தர்கள் பயணம் செய்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு இலங்கை அரசு சார்பில் இருநாட்டு பக்தர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் தீவில் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் பாதுகாப்பு ஏற்பாடாக கச்சத்தீவை சுற்றி ஏராளமான ரோந்து கப்பல்களையும் பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படை நிறுத்தியுள்ளது. கச்சத்தீவு திருவிழாவிற்காக மார்ச் 5ம் தேதி வரை மீன்பிடி படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K