வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (11:09 IST)

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
 
இது குறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழர் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா? பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
 
தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  மொத்தம் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை,  ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ரூ.1000 ரொக்கத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏழை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ராமதாஸ் குறிப்பிட்டார்
 
2022-ஆம் ஆண்டு தவிர கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் ரொக்கத் தொகையை தமிழக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

 
பொங்கல் ரொக்கப் பரிசை நிறுத்துவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை எனவும் கடந்த பல ஆண்டுகளாகவே பொங்கல் பரிசாக சராசரியாக ஆண்டுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது எனவும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். 
 
கடந்த 2020-ஆம் ஆண்டில் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள ராமதாஸ், தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை வழக்கத்தை விட உயர்த்தி தான் வழங்க வேண்டுமே தவிர நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.
 
எந்தக் காரணமும் இல்லாமல் நடப்பாண்டில் பொங்கல் ரொக்கப்பரிசு நிறுத்தப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தமிழர் திருநாளை எவ்வாறு கொண்டாட முடியும்? பொங்கல் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.  
 
குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1000 மாத உரிமைத் தொகையும் தகுதியான பலருக்கு வழங்கப்படவில்லை.  அதனால், பொதுமக்கள் மத்தியில் கடுமையாக மனக்குறை நிலவி வரும் சூழலில்,  பொங்கல் ரொக்கப்பரிசு வழங்கப்படாதது மக்களின் மனக்குறையை கோபமாக மாற்றி விடும் என்பதை அரசு உணர வேண்டும்.  எனவே, பொங்கல் திருநாளையொட்டி அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தபட்சமாக ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
 
அத்துடன்,  முழுக் கரும்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை ரூ.33 போதுமானதல்ல.  அது அவர்களின் உற்பத்திச் செலவைக் கூட ஈடு செய்யாது.  எனவே, செங்கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.