1, 6, 9-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயார்: வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அரசில் நடந்த உருப்படியான ஒரே விஷயம் பாடத்திட்டங்களின் மாற்றம்தான். கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சியில் முதல்கட்டமாக 1,6,9 வகுப்புகளின் பாடத்திட்டங்கள் கல்வியாளர்களின் உதவியுடன் மாற்றப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்பட 7 மொழிகளில் புதிய பாடத்திட்டம் தயாராகி வருவதாகவும், இந்த மூன்று வகுப்புகளில் முதல் பருவ பாடத்திட்டங்கள் ஆங்கில மொழியில் மட்டும் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற மொழிகளில் இன்னும் ஒருசில நாட்களில் தயாராகிவிடும் என்றும் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இந்த புதிய திட்டத்தின்படி மாணவர்கள் மனப்பாடம் செய்து படிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் பாடங்களை புரிந்து படிக்கும் வகையில் இருப்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க முன்வருவார்கள் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இந்த பாடத்திட்டம் வெளியானால் மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும் என்றும், மற்ற வகுப்புகளுக்கும் வரும் ஆண்டுகளில் பாடத்திட்டம் மாற்றப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.