செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By

விலை மகள்

ஏதோவொரு பிரிவு 
எனை ஆட்கொண்டு
வெளியே தள்ளி தாழிட்டது
அப்போது 
 
எங்கிருந்தோ நீண்டு வந்த 
கரங்கள் இரண்டு 
எனை தூக்கி ஆறுதலளித்தது
 
அப்பா என்றோ
அண்ணன் என்றோ
அழைக்கக்கூடாதென
ரகஸிய கட்டளையிட்டது
 
பிறகுதான் 
என் மூளைக்கு எட்டியது 
அது ஒரு 
பெண் வாசனைப் பிடித்தலையும்
ரத்தம் குடிக்கும் காட்டேரி என்று 
 
என் பருவ வீட்டினை
இடித்துள்ளே புகுந்த 
மதயானையும் அதுதாம்
 
பிறகு 
 
இந்த வெள்ளை நிறமும் 
உதட்டுச் சிவப்பும்
நிமிர்ந்த கொங்கையும்
முகவடிவுமே
எனக்கு துரோகிகள்
 
வளைந்து கொடுக்க முடியாது
முறிந்து கொடுக்கவும் முடியாது 
திமிறிய கணங்களில் 
 
ஒவ்வொன்றாய் வந்த 
வெறி நாய்கள் 
என்னை சுவைத்து ஏப்பமிட்டன
 
அட போங்கடா
 
ஒரு நாளில் 
எத்தனை பேருடன் 
வியர்வை நாற்றம் நுகர்ந்து 
ஈடுகொடுக்க முடியும் 
 
இல்லை 
 
என்னுறுப்பு ரப்பரால் செய்யப்பட்டதா? 
 
முகம் தெரியாதவன் 
மொழி தெரியாதவனிடமிருந்தெல்லாம்
எப்படி நான் மீள்வது 
 
ஒவ்வொருவனின் வர்ணனைக்கும்
ஒவ்வொருவனின் ரசனைக்கும்
உடன்படவில்லையெனில்
காயங்களும் கீறல்களுமே எஞ்சும்
 
ஒரு தலைவலிக்கு
மாத்திரைகள் இல்லை 
மாதவிலக்கிற்கும்
நாப்கின்கள் இல்லை 
 
அப்படி என்னடா 
பெண் சுகம் கண்டு விட்டீர்கள் 
தேவடியா பயல்களா
 
இல்லை நான் 
விட்டு விடுங்களென்றால்
விட்டு விடவா போகிறீர்கள்? 
 
என் தூக்கம் கனவு ஆசை அனைத்தையும் 
காசாக்கிவிட்டீர்களே
என் மகிழ்ச்சி கோபம் சிரிப்பு 
யாவையுமே
வடிகட்டி குடித்துவிட்டீர்களே
 
இனி எனக்கிருப்பது
வெறும் எலும்புக்கூடும் தோலும்தானே
 
அல்லது 
என் வாழ்க்கை 
யாரோ ஒரு முகம் தெரியாதவனிடமிருந்து
கிடைக்குமா?
 
-கோபால்தாசன்