கவிதை - அம்மா

Sasikala| Last Updated: சனி, 13 மே 2017 (15:36 IST)
அம்மா
 
பொத்தி பொத்தி
வளர்த்தவளே !
 
உன்
புடவை பிடித்து
சுத்தி சுத்தி
வந்த நாட்கள்
இன்று
எட்டி எட்டிப்
பார்கின்றது - என்
எழுதுகோல் வழியாக....
 
நினைவுகள்
சரிய சரிய
கண்ணீர் துளி
கசிய கசிய
பழைய நினைவுகள்
பம்பரமாய் சுழல சுழல
மனதிற்குள்
நிறப்பிரிகை நிகழ்கின்றது....

 
அம்மா
உன்
கைப்பட்டதால் தானே
கடுகுக்கும்
கருவேப்பிலைக்கும்
சுவை கூடியது.
 
உன்
வெகுளி தனத்திடம்
தோற்றுத்தானே
வெள்ளை நிலவு
தலை குனிந்தது.
 
அறிவுக்கெட்டவளே
என்று அடிக்கடி
திட்டும் அப்பாதானே
உன்னிடமே
ஆலோசனை கேட்டது.
 
அம்மாவை
படைத்துவிட்டுதானே
பிரம்மனால்
சொர்கத்தை
படைக்க முடிந்தது.
 
நீ
கற்றுத்தந்த
தமிழ்தானே
இந்த வெள்ளைத்தாளுக்கு
வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறது....
 
அன்பை
அணு அணுவாய்
அனுபவிக்க
அம்மா மடி மட்டுமே
உத்திரவாதம்!
 
அம்மாவிற்கு நிகர்
அன்னை !
அன்னைக்கு நிகர்
தாய் !
தாய்க்கு நிகர்
அம்மா !
 
உலக
ஒட்டுமொத்த
ஆராய்ச்சி மையம்
இன்றுவரை
தோற்றுக்கொண்டே
இருக்கிறது
உன் அன்பிற்கு
ஈடாய்
என்ன இருக்குமென்று ....
 
அம்மா
இன்று
நானும் ஒரு தாய்.
இப்போதும்
நான் தேடும்
ஒரே சொர்கம்
நீ மட்டும் தான்....
 
மீண்டும்
உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....
 
- த.நா. பரிமளச்செல்வி

 
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :