கஜாவினால் கசங்கின இதயங்கள்.....

Last Updated: புதன், 21 நவம்பர் 2018 (18:06 IST)
அசுரக் காற்றொன்று
ராட்சச கரம் கொண்டு
அப்பாவி நிலங்களை சூறையாடியது
 
நடுநிசி என்றும் பாராது புகுந்து
உயிரையும் உடைமையையும் பிடுங்கி
வாரிச்சுருட்டியபடி வீதிக்கு வந்து
ஊளையிட்டுச் சென்றது
அய்யகோ 
எம்மக்கள்
வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி
அலறினர் துடுத்தனர்
 
தோராயமாய் அரசு
குறித்து வைத்திருந்த சேத மதிப்பீட்டையும்
தாண்டி நீண்டது பாதிப்பு
 
நகரமோ கிராமமோ
இருளை கக்கியது
குடிசையோ மாடியோ
வெள்ளத்தை பருகியது
 
வெறும் நீரையே குடித்து நின்றதால் 
வீடுகள் மற்றும் மரம் பயிர்கள் சாய்ந்தன
இதில்
மனிதம் மிருகம் பறவைகள் செத்தன
வேறுபாடுகளின்றி
ஒரே புள்ளியில் குழுமி
உணவு தயாரித்து பரிமாறிக்கொண்டன
மனிதநேயம்
 
வறட்சிக்கும் மழைக்கும் புயலுக்கும்
பலியாவது விவசாயமும் விவசாயியின்
நிம்மதியும் எனப்து வாடிக்கை
 
இப்படி நொறுங்கி கிடக்கும் இதயத்தை மெல்ல பொறுக்கியெடுத்தபடி
மேலெழ முயற்சிக்கையில்
விவசாயக்கடன்
ஹைட்ரோ கார்பன் மீத்தேன் என
தொடர் தாக்குதல்கள்
 
அதையும் தாங்கியபடி
ஒரு கைகளில் விளைவித்த, பயிரினை
அள்ளி நீட்டுகிறான்
 
அதிலும்
அவன் விளைவித்த தரமான
பயிரினை நம்மிடம் தந்திவிட்டு
தரமற்ற உணவினை உட்கொள்வதை
 
என்ன சொல்ல...
 
ஒரு லாரி சத்தம் அல்லது
ஒரு கார் சத்தம் கேட்டாலோ
உணவோ குடிநீரோ என
எழுந்தெழுந்து ஓடிப்போய்ப் பார்ப்பதை
 
என்ன சொல்ல....
 
இயற்கை தந்த காயங்கள்
ஒரு புறமிருந்தாலும்
உதவிக்கரங்கள் நீட்டும் அன்பில்
அது ஆறிப்போகட்டும்.
 
- கவிஞர் கோபால்தாசன்


இதில் மேலும் படிக்கவும் :