தேவையான பொருட்கள்:
மீன் - 1 கிலோ (முள்ளு இல்லாத மீன் - வஞ்சரம்)
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
பெரிய வெங்கயம் - 1/4 கிலோ
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
நெய் - 1/4 கப்
எண்ணெய் - 1 கப்
எலுமிச்சம்பழம் - 2
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு, பட்டை விழுது - 5 ஸ்பூன்
பிரிஞ்சி இலை - சிறிதளவு
சோம்பு, கசகசா - 3 ஸ்பூன்
ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி - 10 கிராம்
முந்திரி, திராட்சை - 20 கிராம்
ஏலக்காய் - 5
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
முதலில் மீனை சுத்தம் செய்து முள் நீக்கி துண்டு போடவும், பின் அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுக்கவும். பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து பாதி வெந்த பதத்தில் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து அரைக்கவும். சோம்பு, கசகசா இரண்டையும் அரைக்கவும். ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்து பொடி செய்து கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும்.
வணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி. அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி,பூண்டு,பட்டை விழுது சேர்த்து வதக்கவும். அத்துடன் கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி, போட்டு அத்துடன் பச்சைமிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும். முந்திரி,திராட்சையை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்.
பிரியாணி கலக்க:
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்பு மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக்கவும். அடுத்து சாத்தை எடுத்து கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும்.
இதேபோல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும். பின்பு குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும், ஒரு விசில் வரும் முன்னே அடுப்பை அனைத்து விடவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறலாம்.