செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அவரைக்காயில் உள்ள சத்துக்களும் அவற்றின் பயன்களும் !!

அவரையில் பல வகைகள் உண்டு. அவற்றுள் சிலவாக கோழி அவரை, சப்பரத்தவரை, கொத்தவரை, சீனி அவரை, காட்டவரை, பூனைக்கால் அவரை, சீமை அவரை, முருக்கவரை, வாளவரை, பேயவரை, ஆட்டுக் கொம்பு அவரை, வெள்ளவரை ஆகியவற்றை கூறலாம்.

அவரையில் உடலுக்கு ஊட்டச்சத்தும் மருந்தும் ஆகும் பொருட்கள் மலிந்துள்ளன. அவரையில் “போலேட்” என்னும் விட்டமின் சத்து மிகுதியாக உள்ளது. 
 
ஒரு கப் அவரையில் ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்குத் தேவையான “போலேட்” விட்டமின் சத்தில் 44% அளவு உள்ளது. இந்த “போலேட்” தாவர ரசாயன மாற்றங்களுக்கு உறுதுணையாய் நின்று மரபு அணுக்களின் உற்பத்திக்கும், செல்களின் வளர்ச்சிக்கும், அமினோ ஆசிட்கள் உருவாவதற்கும் உதவுகிறது. 
 
கர்ப்பிணிகளின் வயிற்றில் வளருகின்ற குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்தினைத் தருவதாகவும் “போலேட்” உதவுகின்றன. இதனால் கரு உருவாவதற்கு முன்போ கருவுற்ற பின்போ தாய்மார்கள் அவரைப் பிஞ்சினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் குறைப் பிரசவம், குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள், முதுகுத் தண்டு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள் ஆகியன வராமல் குழந்தை ஆரோக்கியமாக உருவாவதற்கும் உதவுகிறது. அவரையில் உள்ள இரும்புச் சத்து ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக உதவுகின்றது.
 
அவரை காயில் உள்ள நார்ச்சத்து சீரண உறுப்புகளைச் சீராக இயங்க வைக்க உதவுகின்றது. இதனால் மலச்சிக்கல் அறவே இல்லாமல் இருப்பதோடு உடலில் தன்னிச்சையாகச் செயல்பட்டு ஒருங்கு சேர்ந்து புண்களை உருவாக்கி நாளடைவில் புற்று நோயாக மாறச் செய்யும் மாசுக்களை (டாக்ஸின்) உடலில் தங்காத வண்ணம் வெளியேற்ற உதவுகிறது.
 
சர்க்கரை நோயாளிகளுக்கும் மற்றும் மலச்சிக்கல் நோய்க்கும் இது மருந்தாகிறது. அவரையில் பொதிந்துள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் ஒருங்கே சேர்ந்து உடல் எடை குறைவதற்கு உதவுகின்றது. 
 
அவரைக்காய் உடலில் சேர்ந்த கொழுப்புச் சத்தை வெளியேற்றவும் வகை செய்கிறது. இதனால் இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயல்படுவதற்கும் ஏதுவாகின்றது.