1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஓரிதழ் தாமரை எந்த நோய்களுக்கெல்லாம் நிவாரணம் தருகிறது தெரியுமா...?

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் மட்டுமன்றி முழுச் செடியுமே மருத்துவக்குணம் வாய்ந்தது. ஓரிதழ்தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நோய்களால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து உடலைத் தேற்ற ஓரிதழ்தாமரை சமூலத்தை உண்பதன்மூலம் நிவாரணம் பெறலாம். இதே சமூலத்தை கஷாயம் செய்து  குடித்து வந்தால் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம்.
 
ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்த கஷாயம் நல்லதொரு மருந்தாகும். உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுப்பவர்கள் இதே கஷாயத்தை அருந்தி கைமேல் பலன் பெறலாம்.
 
ஓரிதழ்தாமரையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து சிறு உருண்டையாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு வந்தாலும் மேலே சொன்ன பிரச்னைகள்  தீரும்.
 
உணவு, சூழல், பொருளாதாரம் காரணமாக சில இளைஞர்கள் இளம்வயதிலேயே முதியவர்கள்போல காணப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இதே ஓரிதழ் தாமரை,  கீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம்.
 
பாதுகாப்பற்ற உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களை பாடாய்ப்படுத்தும் நோய்களில் ஒன்று மேகவெட்டை (பாலியல் நோய்). பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில் வரக்கூடிய இந்த மேகவெட்டை நோய்க்கு ஓரிதழ்தாமரை சமூலம் பலன் தரும்.
 
ஓரிதழ்தாமரை சமூலத்துடன் பச்சைக் கற்பூரம், கோரோஜனை (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் பசு நெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். 
 
ஆண்மைக்குறைபாடு, குழந்தையின்மை பிரச்னை, தாம்பத்யத்தில் ஈடுபட இயலாமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்த ஓரிதழ்தாமரை பலனளிக்கும். இலை, தண்டு,  வேர், பூ, காய் என ஓரிதழ் தாமரையின் முழு சமூலத்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு தூங்கச்செல்வதற்கு முன் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.