வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முழுத்தாவரமும் மருத்துவ பயன் கொண்ட நித்தியகல்யாணி !!

நித்தியகல்யாணி தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. பாழ் நிலங்கள், சாலையோரங்களில் அதிகமாகக் காணலாம். அழகுத் தாவரமாக வீடுகளிலும்  வளர்க்கப்படுகின்றது. 

முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. பூ, வேர் ஆகியவை அதிகமாக மருத்துவத்தில் பயன்படுபவை. நித்தியகல்யாணி மலர்கள், ஐந்து இதழ்களைக்  கொண்டது. 
 
இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறமானவை. நுனியில் 2, 3 கொத்துக்களாகக் காணப்படும். எல்லா பருவங்களிலும் இந்த தாவரம் பூத்துக் குலுங்குவதால் நித்ய கல்யாணி என்கிற பெயரைப் பெற்றது.
 
நித்தியகல்யாணி பழங்கள் இரட்டையானவை. நிறைய விதைகளுடன் கூடியவை. காக்கைப் பூ, சுடுகாட்டுப் பூ, சுடுகாட்டு மல்லிகை, கல்லறைப் பூ ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு.
 
நித்திய கல்யாணி வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படும் இரத்தப் புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவப் பயன் கொண்டது. இதன் இந்த மருத்துவக் குணம் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சிறுநீர் தாரை நோய்கள் சரியாக நித்தியகல்யாணி பூக் கஷாயம் தினமும் நான்கு வேளைகள் 25 மிலி அளவு சாப்பிட வேண்டும். அல்லது வேரை காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வரவேண்டும். 
 
உடல் அசதி குணமாக 5 நித்தியகல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் இட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி குடிக்க வேண்டும். இதைப் போல ஒரு நாளைக்கு 3  வேளைகள் 5 நாள்கள் வரை சாப்பிடலாம்.